Monday, February 6, 2012

அடிடா அவள! உதைடா அவள!

“மச்சி! இந்த பொண்ணுங்களே இப்பிடி தான்டா! இன்னைக்கி காதலிப்பாளுங்க. நாளைக்கு கழட்டி வுட்ருவாளுங்க!”

“பொண்ணுங்க தான் நம்ம இளைஞர்களோட வாழ்வின் சாபம்!”

“இந்த பிகரு செம கட்டடா மாம்ஸ்!”

“என் லைப் வீணா போனதே ‘லவ்’வால தான்!”

“ஒரு பொட்டசியை நம்பி ஏமாந்துட்டேன்டா!”

இது போன்ற வசனங்களும் வாக்கியங்களும் தினந்தோறும் நம் கண் முன் வந்து போவதுண்டு. ஊடகங்கள், வலைதளங்கள், பொது இடங்கள், என்று மக்கள் அதிகம் குவியும் இடங்களில் இது போன்ற பேச்சுகள் இன்றும் இருந்து கொண்டு தான் இருக்கின்றன.

பெண்களை கேவலமாக, கீழ்தரமாக, காமப்பொருளாக, ஆண்களை ஏமாற்றி வாழும் பிறவிகளாக சித்தரிக்கும் தமிழ் திரைப்படங்கள் தற்போது ஏராளமாக வந்து குவிக்கின்றன.

நேற்று ‘மெரினா’ என்ற திரைப்படம் காண சென்றேன். நல்ல ஒரு திரைப்படம். மெரினா கடற்கரையின் வாழ்க்கையை அழகாய் பதிவு செய்துள்ளார் இயக்குனர். எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் (முன்பு! இத்திரைப்படம் பார்த்த பின்பு அந்த பிடிப்பு வலுவற்றுபோனது!)

மெரினா கடற்கரை வரும் ஒரு காதல் ஜோடியின் கதையும் இதில் அடக்கம். அதில் வரும் கதாநாயகியை எப்போதும் ஒரு ரோதனையாக, காதலனுக்கு வாய்த்த தலைவலியாக சித்தரித்த விதம் தவறாக இருந்தது. அதற்கு நம் மக்கள் பலரும் கை தட்டி வரவேற்கும் விதம் கண்டு வருத்தமாயிருந்தது. கை தட்டிய கும்பல் பெரும்பாலும் ஆண்களே, அதுவும் இளைஞர்களே! நூற்றில் தொண்ணுறு சதவிகிதம் காதல் தோல்வியடைந்த கூட்டம் என்று தான் நினைக்கிறேன்!

கமல்ஹாசன் அவரது திரைப்படம் ஒன்றில் சொல்லும் வசனம் ஞாபகம் வருகிறது, “பொய்த்தது காதலல்ல, காதலர்களே!” அந்த வசனமே இவர்களுக்கு பொருந்தும்!

காதல் என்ற விஷயம் அதை தெளிவாக தெரியாமல், அல்லது அரைகுறை அறிவை கொண்டு, காதல் உறவில் ஆண்கள் எல்லாம் பாவம், பெண்கள் எல்லாம் வெறும் வேஷம்! போலி! என்று சித்தரிக்கும் இது போன்ற படைப்புகள் அணியணியாக நம்முன் படையெடுத்து வருகின்றன, இனியும் வரும்!

“டேய்! இதெல்லாம் ஒரு ஜாலிக்கு டா! ஜஸ்ட் என்ஜாய்!” என்று சொல்லும் அன்பர்களுக்கு... இங்கு இந்தியாவில், சினிமா ஒரு மிகப்பெரிய பொழுதுபோக்கு கருவி! அந்த கருவி மூலம் ஆக்கம் நிறைய இருப்பதை விட சிறு சேதாரங்கள் தொடங்கி பெரும் அழிவுகள் ஏற்பட வாய்ப்புகளே அதிகம்! அது நிறைய சம்பவங்கள் நடந்தும் நம் நினைவை விட்டு போகாது!

ஏனெனில் இதை காணும் மனங்கள் பொதுவாக இளைஞர்கள் தான். அவர்கள் திரையில் காணும் பிம்பங்களை தங்கள் வாழ்வில் பொருத்தி பார்க்க துடிப்பவர்கள். வாழ்வின் முதல் படி எடுத்து வைப்பவர்கள். புதிதாக காணும் விஷயங்களை சட்டென மனதினுள் ஏற்றி கொள்ளும் தன்மை கொண்டவர்கள். ஏற்கனவே இளைஞன் என்றால், குடி, புகைப்பழக்கம் கொண்டவனாக இருத்தல் அவசியம். பெண்கள் கூட்டம் என்றும் மொய்த்து தின்னும் ஒரு மன்மதனே இளைஞன் என்பது போன்ற பிம்பங்கள் கொண்ட திரைப்படங்கள் கொஞ்ச காலமாக வெளிவருகின்றன. அவை செய்த உட்சபட்ச நன்மை, நாட்டில் டாஸ்மாக்குகளை தேடி ஓடி, வரிசையில் நின்று குடித்தே உடல் நலம் கெடுத்து வாழும் ஒரு கூட்டத்தை உருவாக்கியுள்ளது.

இன்னும் தெளிவாக சொல்ல போனால், பொதுவாக பல காதலர்கள் சினிமா கற்று கொடுத்த காதல் வழிமுறைகளை பின்பற்றி காதலிப்பதை நம்மால் காண முடியும். சிறந்த எடுத்துக்காட்டாக, ரோஜா பூ கொடுத்தல்! ரோஜா பூ தான் காதலிக்கு கொடுக்க வேண்டும் என்ற அவசியமோ, கோட்பாடுகளோ இல்லையே! :-)

இந்த மெரினா திரைப்படத்தில் எஸ்.எம்.எஸ் கொண்டுள்ள நகைச்சுவை காட்சி ஒன்று உள்ளது. அதில் காதலன் காதலியிடம் அந்த எஸ்.எம்.எஸ்சை படித்து காட்டுவான். அதில் வரும் வசனம், “பெண்கள் இல்லாத உலகம் எப்படி இருக்கும்?” என்று காதலன் கேட்க, காதலி விடை தெரியாமல் நிற்கிறாள். அதற்கு காதலன், தன் மனதினுள் சொல்லி கொள்கிறான், “ரொம்ப நிம்மதியா இருக்கும்!” என்று. உடனே நம் கனவான்களும், இளைஞர் பட்டாளமும் கைத்தட்டி சிரித்து மகிழ்ந்தன. எனக்கு அந்த காதலன் கேட்ட கேள்விக்கு தோன்றிய ஒரே பதில், “பெண்கள் இல்லாத உலகம் ஒன்று இருந்திருந்தால் நானில்லை, நீயில்லை, கொக்கரித்து சிரித்த அந்த ஆண்களே இல்லை!”. வசனங்களின் தவறான பயன்பாடு! இவை எல்லாம் நகைச்சுவை என்று கொள்பவரை நினைத்து நாம் அனுதாபம் தான் கொள்ள வேண்டும்! இளையோர் மீண்டும் மீண்டும் திரையரங்கம் வந்து படத்தை கண்டுக்களிக்க வேண்டும் என்று இது போன்ற வசனங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை அந்த இளையோர் மனதில் எத்தகைய பிம்பங்களை பதிக்கிறது என்று அந்த திரைப்பட இயக்குனர்கள் உணர தவறுகின்றனர். அதுவும் ‘பசங்க’ திரைப்படம் தந்த பாண்டிராஜ் போன்ற இயக்குனர்கள் இது போன்ற தப்புக்களை அரங்கேற்றும் போது வருத்தமும் ஏமாற்றமுமே மிஞ்சுகிறது.

நம் அம்மா பெண் தானே! அவள் நமக்கு தொல்லையா?

நம் உடன் பிறந்த அக்கா தங்கைகள் பெண் தானே! அவர்கள் நமக்கு கேவலமா?

நமக்கு கற்று கொடுத்த பெண் ஆசிரியைகள் எல்லோரும் கீழ்தரமானவர்களா?

இன்றைய காலத்தில் சமைத்தல் முதல் வீட்டின் கடைசி வேலையான கூட்டி பெருக்குதல் வரை செய்துவிட்டு, வெளியே வேலைக்கு போய் சம்பாத்தித்து, குழந்தைகள் பேணி காக்கும் எண்ணற்ற மனைவிமார்கள் இந்நாட்டில் உண்டு! அவர்கள் எல்லோரையும் என்னவென்று சொல்ல?

இத்திரைப்படத்தில் வரும் காதலியை வெறுமனே சிறுமையாக காட்ட வேண்டிய அவசியம்? இந்த அவசர உலகில், எல்லாமே அவசரம் தான்! காதலும் அப்படி ஒரு அவசியமான அவசர உறவே இக்காலத்து இளையோருக்கு (ஆணுக்கும் பெண்ணுக்கும்!). காதல் உறவில் பெண்களே தவறு! ஆண்கள் எல்லாம் சிறப்பு என்ற சித்தாந்தத்தை விவரிக்கும் வண்ணம் இத்திரைப்படம் அமைந்துள்ளது.

பெண்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகை சில பெண்டிர்கள் இவ்வுலகில் உண்டு. ஒப்புகொள்கிறேன்! ஆனால், அவர் பலர் அல்ல, சிலரே! அந்த சிலரை காரணம் காட்டி பல பெண்களை அசிங்கபடுத்தும் இந்த (MALE CHAUVENIST) ஆணாதிக்க முறையை எதிர்க்க வேண்டும்! மாற்ற வேண்டும்! Facebook, Orkut தொடங்கி எல்லா வலைத்தளங்களிலும் பெண்டிரை, அதுவும் காதலியை, கேலி செய்யும், அதில் தன் ஆண்மையை நிரூப்பிக்க துடிக்கும் எண்ணற்ற ஆண்கள் உண்டு! நண்பர்கள் இடையே மதிப்பு பெற, சாலையில் செல்லும் பெண்களை தன் நண்பர்கள் கும்பலுடன் அமர்ந்து கேலி செய்யும் முதுகெலும்பற்ற ஆண் ஜென்மங்களையும் நாம் பார்த்திருப்போம். தனியே ஒரு ஆண் நின்று பெண்களை கேலி செய்த வரலாறு நாம் கண்டிருக்க மாட்டோம்! ரோட்டில் செல்லும் எந்த பெண்ணையும் கேலி செய்வான்! அவனே, தன் வீட்டு பெண்ணை எந்தவொரு ஆணும் கிண்டல் கேலி செய்தால் போச்சு! கிண்டல் செய்தவனின் பல்லை பதம் பார்ப்பான்! இது தான் பொதுவான ஆண்களின் மனோபாவம்!

நான் சொல்வது என்னவென்றால், வியாபாரத்திற்காக, வீண் விளம்பரத்துக்காக, பெண்களை கேலி செய்யும் போக்கு ஆப்பதானது! அது ஒரு ஆணிற்கு எந்தவொரு பெருமையும் தேடி தரப்போவதில்லை! அந்த நிமிடத்திற்கு ஒரு சின்ன மகிழ்ச்சி! அவ்வளவுதான்! அப்படி கேலி செய்யும் ஆண்கள் தங்கள் நன்மதிப்பை இழப்பர்! எளிமையாக சொல்ல வேண்டுமெனில், பெண்ணை கிண்டல் கேலி செய்வதால் ஒரு ஆண் ஹீரோ ஆவதில்லை! அவன் சீரோ ஆகிறான்! வில்லனாக ஆகிறேன்! சமயங்களில் காமெடியனாக கூட தெரிவான்! :-)

ஆண் என்பவன், பெண்ணை தன்னை போன்ற ஒரு மனித பிறவியே என்று உணர்தல் வேண்டும். அவள் தனக்கு கீழ் இருக்க வேண்டும் என்ற கிழிந்து போன, வேலைக்கு உதவாத, பழைய பஞ்சாங்கத்தை தீக்கு இரையாக்குதல் வேண்டும்! பள்ளி பருவத்திலிருந்தே பெண்ணை ஒரு நல்ல தோழியாக பாவித்தல் அவசியம். இதற்கான விஷயங்களை கதைகளாகவோ பாடலாகவோ மாணவர்களுக்கு கல்வி பாடத்தில் சேர்த்திட வேண்டும். அதுவே அவர்களுக்கு இந்த ஆண் பெண் உறவில் உள்ள அடிப்படை சிக்கல்களை உடைத்தெறிய ஏதுவாக இருக்கும். இன்றைய காலத்தில், கல்லூரியில், ஒரு பெண் ஆணிடம் சிரித்து பேசி விட்டாலே அது காதல் தான் என்று கற்பனை கோட்டைகள் கட்டி வாழும் எண்ணற்ற இளைஞர் கூட்டம் உண்டு! இது வளர வளர மிக கொடூரமான கொலைகள், கற்பழிப்புகள், சம்பவங்கள் நடைபெற காரணமாகவும் அமைகிறது.

“இதெல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியமா? எவ்வளவோ பிரச்சனை இருக்கு இங்க! இது ரொம்ப அவசியமா?”, என்று கேட்போர்க்கு, முன்பொரு காலத்தில் முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டிய இப்படிப்பட்ட எண்ணற்ற விஷயங்களை மிக சாதாரணமாக விட்டதால்தான் இன்று நம் முன் அவை பெரும் விஷமங்களாக வளர்ந்து நிற்கின்றன!

இது போன்ற பெண்களை சீண்டும், மனைவியை கேலி செய்யும், மனைவி வீட்டாரை பொது இடங்களில் சிறுமையாக பேசும், உடன் பிறந்த பெண்களை கேலி செய்யும் ஆண்களின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது. இந்திய தாயென்றும், மகாலட்சுமி என்றும், சரஸ்வதி என்றும், துர்கை என்றும், மேரி மாதா என்றும் பெண்டிரை முன்னிலைப்படுத்தி மகிழும் நம் இந்தியாவில் இனியும் இந்த பேதங்கள் இருத்தல் கூடாது! இப்போது நாம் வாழும் உலகம் எல்லோருக்கும் பொதுவானதே! அது ஆணோ பெண்ணோ! இருவரும் சமம்மே!

பெண்ணை காரணமில்லாமல் கிண்டல் கேலி செய்யும், சிறுமையாக்கும் படைப்புகளை ஊக்குவிப்பதை தவிர்ப்போம்!

இறுதியாய், ‘தளபதி’ என்ற திரைப்படத்தில், மம்மூட்டி சொல்லும் ஒரு வசனம், “பொம்பள பசங்க தான் கடைசி காலத்துல நமக்காக நாலு சொட்டு கண்ணீர் விடுவாங்க!”

- பி.சி.பாலசுப்பிரமணியம்

காஞ்சிபுரத்தில் ஒரு நாள் - Kanchipuram Moments

ஸ்ரீ காச்சபேஸ்வரர் திருக்கோயில் - Sri Karchapeswarar Temple -----------------------------------------------------------------------------...